ஜெனரேட்டர் புகையை சுவாசித்ததால் பெண் உயிரிழப்பு
வீடொன்றினுள் இயங்கிக்கொண்டிருந்த மின்பிறப்பாக்கியிலிருந்து (ஜெனரேட்டர்) வெளியான நச்சுவாயுவை சுவாசித்ததால் உயிரிழந்ததாகச் சந்தேகிக்கப்படும் குடும்பப் பெண்ணின் சடலம், உறவினர்களிடம் இன்று (6) ஒப்படைக்கப்பட்டது.
இச்சம்பவம் கடந்த 04 ஆம் திகதி அம்பாறை மாவட்டம், கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனைக்குடி 5ஆம் பிரிவு, புதிய வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.

தந்தை மற்றும் மகள் வைத்தியசாலையில்
சம்பவத்தில் 54 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்தார். வீட்டினுள் இயங்கிய ஜெனரேட்டரிலிருந்து கசிந்த காபன் மொனொக்சைட் (Carbon monoxide) சுவாசித்தமையாலேயே குறித்த பெண்ணின் மரணம் சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சடலம் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. சட்ட வைத்திய அதிகாரி கசுன் பெரேரா பங்கேற்புடன், மரண விசாரணை இடம்பெற்றது.
அத்துடன், குறித்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட தந்தை மற்றும் மகள் ஆகியோர் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகின்றது.
மேலும் சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.