உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த நினைப்பவர்களா நீங்கள்? அப்போ தினசரி உணவில் இந்த பழங்களை சேத்துக்கோங்க
மனிதனின் ஆரோக்கியத்திற்கு வேண்டிய சத்துக்கள் அனைத்தும் பழங்களில் அடங்கியுள்ளன. எனவே உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த நினைப்பவர்கள் தங்களின் தினசரி உணவில் பழங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பழங்களை உட்கொள்வதன் மூலும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் சிறப்பாக பராமரிக்கப்படும். ஆனால் பழங்கள் குறித்த பல தவறான கருத்துக்கள் மக்களிடையே உள்ளன.
அதில் ஒன்று தான் பழங்களை வெறும் வயிற்றில் உட்கொள்ளக்கூடாது என்பது. சில பழங்களை வெறும் வயிற்றில் காலை உணவின் போது உட்கொண்டால் அதில் உள்ள முழு சத்துக்களையும் உடல் உறிஞ்சும் மற்றும் செரிமான மண்டலம் ஆரோக்கியமாக செயல்படும்.
பப்பாளி
பப்பாளியில் பாப்பைன் மற்றும் சைமோப்பைன் போன்ற நொதிகள் உள்ளன. இந்த நொதிகள் தான் செரிமானத்தை மேம்படுத்துகின்றன மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கின்றன.
இந்த பப்பாளியை வெறும் வயிற்றில் உட்கொள்ளும் போது அதில் உள்ள வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ போன்றவை உடலால் திறம்பட உறிஞ்சப்படுகின்றன.
இந்த வைட்டமின்கள் அனைத்தும் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதோடு சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்கின்றன.
தர்பூசணி
இரவு நீண்ட நேரம் எதையும் சாப்பிடாமல் காலையில் வெறும் வயிற்றில் தர்பூசணியை உட்கொள்ளும் போதுஅது வறண்டு போன உடலுக்கு போதுமான நீர்ச்சத்தை வழங்கும்.
தர்பூசணியில் லைகோபைன் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது.
இது இதயம் மற்றும் சருமத்திற்கு நல்ல பாதுகாப்பை வழங்குகிறது.
ப்ளூபெர்ரி
ப்ளூபெர்ரியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன. குறிப்பாக அந்தோசையனின்கள் உள்ளன.
இவை மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன.
அதுவும் இந்த ப்ளூபெர்ரியை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ளும் போது அது ஞாபக மறதியை தடுப்பதோடு இரத்த சர்க்கரை அளவைப் பராமரிக்கவும் உதவுகிறது.
வாழைப்பழம்
வாழைப்பழத்தை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ளும் போது அது உடலின் ஆற்றலை மேம்படுத்துகிறது.
ஏனெனில் வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நேச்சுரல் சர்க்கரை போன்றவை அதிகமாக உள்ளன.
முக்கியமாக இதில் இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கும் பொட்டாசியம் அதிகளவில் உள்ளன.
அன்னாசிப்பழம்
அன்னாசிப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடலாமா கூடாதா என்ற கேள்வி பலருக்கும் எழலாம்.
ஆனால் அன்னாசியை வெறும் வயிற்றில் சாப்பிடுவது மிகவும் நல்லது.
ஏனெனில் இப்படி உட்கொள்ளும் போது இந்த பழத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் மாங்கனீசு போன்றவை உடலால் எளிதில் உறிஞ்சப்பட்டு நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் மற்றும் எலும்புகளை வலுவாக்கும்.
இந்த பழமானது வயிற்று உப்புசம் மற்றும் வயிற்றில் உள்ள அழற்சியைக் குறைக்கிறது.
ஆப்பிள்
ஆப்பிளை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வது இன்னமும் நல்லது. ஆப்பிளில் பெக்டின் என்னும் ஒரு வகையான நார்ச்சத்து உள்ளது.
இது செரிமானத்தை மேம்படுத்தி, பசியுணர்வைக் கட்டுப்படுத்த உதவுகிறது. அதோடு இதில் க்யூயர்சிடின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன.
இது மூளையின் செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
கிவி
கிவி பழம் உருவத்தில் சிறியதாக இருக்கலாம். ஆனால் அந்த பழத்தை வெறும் வயிற்றில் உட்கொண்டால் அது எதிர்பாராத அளவில் நன்மைகளை வழங்கும்.
இந்த பழமான நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
இந்த பழத்தில் உள்ள ஆக்டினிடின் என்ற நொதி பொருள் செரிமானம் சீராக நடைபெற உதவுகிறது.
எனவே பழப் பிரியராக இருந்தால் காலையில் சமைத்து சாப்பிட நேரம் இல்லாவிட்டால் மேலே கொடுக்கப்பட்டுள்ள பழங்களைக் கொண்டு சாலட் தயாரித்து காலை உணவாக உட்கொள்ளுங்கள்.
இதனால் உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு, பசியும் அடங்கும்.