இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் சைபர் தாக்குதல்கள் ; சபையில் வெளியான தகவல்
இலங்கை சைபர் தாக்குதல்களுக்கு உள்ளாகும் அபாயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், இந்த நெருக்கடியை கையாள்வதற்கு போதுமான சட்டங்கள் நாட்டில் இல்லை. புதிய சட்டங்களை இயற்றுவதற்கு துரிதகர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (22) நடைபெற்ற அமர்வின்போது புதிய ஜனநாயக முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க சைபர் தாக்குதல்கள் தொடர்பில் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, சைபர் பாதுகாப்பு என்பது தற்போது தேசிய பாதுகாப்பு, பொருளாதார ஸ்திரத்தன்மை, பொதுமக்களின் நம்பிக்கை மற்றும் டிஜிட்டல் இறையாண்மை ஆகியவற்றுடன் தொடர்புடைய ஒரு விடயமாக மாறியுள்ளதை அரசாங்கம் ஒப்புக்கொள்கிறது.
டிஜிட்டல் பொதுச் சேவைகள், டிஜிட்டல் கட்டண முறைகள், அடையாள அட்டை நடைமுறைகள், கிளவுட் உள்கட்டமைப்புகள் மற்றும் குடிமக்கள் சேவைகள் ஆகியவை வேகமாக அதிகரித்து வருவதால், இலங்கையில் சைபர் குற்றங்களுக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
அரசாங்கம் இதற்கு பல்வேறு கொள்கை மேம்பாடுகள், சைபர் பாதுகாப்பு அமைப்புகளின் செயலாக்கம், வழிகாட்டுதல்கள் மற்றும் விழிப்புணர்வு உத்திகள் மூலம் வெறும் எதிர்வினை ஆற்றும் மாதிரியிலிருந்து ஒரு ஒருங்கிணைந்த தேசிய சைபர் மீள்திறன் மாதிரிக்கு மாறியுள்ளது.
இலங்கையில் ஏற்படும் சைபர் பாதுகாப்பு சம்பவங்களை இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவிற்கு கட்டாயமாகப் புகாரளிக்க வேண்டும் என்ற சட்டபூர்வத் தேவை இல்லை. இதற்கான முன்மொழியப்பட்ட சைபர் பாதுகாப்புச் சட்டம் தற்போது வரைவு நிலையிலேயே உள்ளது.
இந்த புதிய சைபர் சட்டத்தை இயற்றி, அதன் கீழ் முன்மொழியப்பட்டுள்ள சைபர் குற்றங்கள் ஒழுங்குமுறை அதிகாரசபையை இந்த ஆண்டு இறுதிக்குள் நிறுவுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. என்றார்.