இணையக் குற்றங்களுடன் தொடர்புடைய 318 நபர்கள் கைது
கடந்த 2025 ஆம் ஆண்டில் பல்வேறு வகையான இணையக் குற்றங்களுடன் தொடர்புடைய 318 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வூட்லர் இதனை தெரிவித்துள்ளார்.

முறைப்பாடுகள்
கடந்த ஆண்டில் மட்டும் 2,000க்கும் அதிகமான இணையக் குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இது டிஜிட்டல் தளங்களில் அதிகரித்து வரும் அச்சுறுத்தலை வெளிப்படுத்துகிறது.
இணையக் குற்றவாளிகள் பிரதானமாக இளைஞர்களையும், முதியவர்களையும் இலக்கு வைக்கின்றனர். அத்துடன், அண்மைக் காலங்களில் புதிதாக இணையத்தைப் பயன்படுத்தத் தொடங்கியவர்களும் இத்தகைய மோசடிகளுக்குப் பலியாகும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இணையத்தளங்களைப் பயன்படுத்தும்போது பொதுமக்கள் மிகவும் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக, தங்களது கடவுச்சொற்கள் அல்லது தனிப்பட்ட தகவல்களைத் தெரியாத நபர்களுக்கோ அல்லது அங்கீகரிக்கப்படாத தரப்பினருக்கோ பகிர வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இணையக் குற்றங்களைத் தடுப்பதற்கும், குற்றவாளிகளைக் கண்டறிவதற்கும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.