வரதட்சணை கேட்டு மனைவியை விரட்டியடித்த சுங்கத்துறை அதிகாரி!
தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில், திருமணமான 20 நாட்களில் வரதட்சணை கேட்டு அடித்து விரட்டியதாக கணவர் மீது இளம் பெண் ஒருவர் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த (2021) மே 28 ம் தகதி மும்பையில் மத்திய சுங்கத்துறையில் கெமிக்கல் அசிஸ்டெண்ட் அதிகாரியாக பணிபுரியும் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும், பெருந்துறையை சேர்ந்த எம்.சி.ஏ. பட்டதாரி உமாமகேஷ்வரிக்கும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் இடம்பெற்றது..
திருமண நிகழ்வு முடிந்த பின்னர் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கணவர் வீட்டிற்கு சென்ற உமா மகேஸ்வரியை, மணிகண்டனும் அவரது குடும்பத்தினரும் 20 நாட்களில் வரதட்சணை கேட்டு அடித்து விரட்டியதாக உமாமகேஸ்வரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
திருமணமான இளம் பெண் மத்திய அரசு பணியில் இருப்பதால் அதற்கேற்ப 40 சவரன் தங்க நகையும், 2 லட்சம் ரூபாய் பணமும் வரதட்சனையாக பெற்றோரிடம் வாங்கி வருமாறு கூறி அடித்து, சித்ரவதை செய்ததாகவும் புகாரில் குறித்த இளம் பெண் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பொலிஸார் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறிய அவர், கணவருடன் சேர்த்து வைக்குமாறும் இல்லையெனில், கணவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தினார்.