திறந்து வைக்கப்பட்டது யாழ் காலாசார மத்திய நிலையம்! சிறப்பம்சங்கள் என்னென்ன ?
இந்திய -இலங்கை நட்பு ரீதியாக யாழ்ப்பாண நகரில் இந்தியாவின் உதவியுடன் அமைக்கப்பட்ட கலாசார மத்திய நிலையம் இன்று பிற்பகல் 1.15 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோர் இணைந்து கலாசார மத்திய நிலையத்தை கொழும்பிலிருந்து இணையவாயிலாக வைத்தனர்.
இந்த கலாசார மண்டபமானது 2011 ஆம் ஆண்டு அன்றைய இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்த இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க மார்ச் 2015 ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, யாழ்ப்பாணம் வருகை தந்து இந்த கலாசார மத்திய நிலையத்துக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
இந்தியாவின் நிதியுதவியில் 1.6 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட நிலையமானது சைவத் தமிழ் பாரம்பரிய முறைகளை தாங்கிய கலைப்படைப்புகளை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.
11 மாடிகளைக் கொண்ட இந்நிலையம் அருங்காட்சியகத் தொகுதி, கலாச்சார அரங்கு மற்றும் கோபுரத் தொகுதியென 3 பிரதான கட்டடத் தொகுதிகளை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது.
இந்திய தொழில்நுட்ப வல்லுனர்களால் நவீன தொழில்நுட்பங்களுடன் அமைக்கப்பட்டுள்ள இக்கட்டடத்தின் உயரமான பகுதி இந்து ஆலயத்தின் கோபுரத்துக்கு ஒப்பான வகையிலும் வாசல் மாடிப்படிகள் தேர்முட்டிப் படிகளை ஒத்த வகையிலும் அருகில் இருக்கும் குளத்துடன் இணைந்த இந்து ஆலயம் ஒன்றின் கட்டுமானங்களை போன்றதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கலாச்சார மண்டபத்தில் சுமார் 200 தொன் தனி இரும்புகளை பயன்படுத்தி அருங்காட்சியக தொகுதி மற்றும் கலாச்சார அரங்கு அமைக்கப்பட்டிருக்கின்றமை சிறப்பம்சமாகும். கலாசார நிலையம் முழுவதும் 3 ஆயிரம் மின்குமிழ்கள் பொருத்தப்பட்டுள்ள அதேவேளை மண்டபத்தின் பாதுகாப்பு கருதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 120 கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
குறித்த மத்திய நிலைத்தில் சேரும் மழை நீர் மற்றும் பயன்படுத்திய நீர் உட்பட சுமார் 2 இலட்சம் நீரை சுத்திகரித்து சேமித்து வைக்கக்கூடிய பிரமாண்டமான நீர்த்தாங்கி நிலையத்தின் வளாக நிலத்தின் கீழ்அமைக்கப்பட்டுள்ளதுடன் மூன்று மண்டபங்களுக்கும் நீரை வழங்கக்கூடிய 60ஆயிரம் லீற்றர் கொள்ளளவை கொண்ட நீர்த்தாங்கியும் கட்டத்தில் பொருத்தப்பட்டுள்ளது.
காலாசார மத்தியநிலைய கட்டிட தொகுதியில் தீ பரம்பல் ஏற்பட்டால் தானியங்கி தீயணைப்பு கருவிகள் செயற்பட்டு தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கான விசேட தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க கலாசார நிலையத்தினுள் உள் தொடர்புக்கென 80 தொலைபேசி இணைப்புக்களும் மற்றும் வைபை வலையமைப்பும் இங்கு காணப்படுகின்றன.
மேலும் அருங்காட்சியகம் மற்றும் கோபுரப் பகுதிகள் முற்றிலும் குளிரூட்டப்பட்டுள்ளன. சுமார் 600 பேர் வரை அமர்ந்து நிகழ்வுகளை பார்க்கக்கூடிய நவீன திரையரங்கு பாங்கிலான கலையரங்கு அமைக்கப்பட்டுள்ளதுடன் 11 மாடிகளைக் கொண்ட கட்டடத்தை வெப்பம் மழை மற்றும் காற்று ஆகிய இயற்கை அனர்த்தங்களில் இருந்து பாதுகாப்பதற்காக பின்லாந்தில் இருந்து கொண்டுவரப்பட்ட பைன் மரத்தினை (பைன் வூட்) நவீன வேலைப்பாடுகளுடன் கட்டடம் முழுவதும் பொருத்தப்பட்டுள்ளன.
மண்டபத்தை சூழவுள்ள நடைபாதைகளில் மாலை நேரங்களில் வெறும் கால்களுடன் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு ஏதுவாக புத்துணர்ச்சி வழங்கத்தக்க மாபிள் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை யாழ்.மாநகர சபையே பராமரிக்கும் என சபையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் இதன் அடிப்படையில் அண்மையில் யாழ் வந்த இலங்கைக்கான இந்திய தூதர் மற்றும் வெளிவிவகார செயலாளர் ஆகியோரிடம் யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் இரு வருடப் பராமரிப்பு செலவை இந்திய அரசு பொறுப்பேற்றுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.










