சீனாவின் செயலால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பெரும் நெருக்கடி!
மக்கள் வங்கியை சீனா கறுப்பு பட்டியலிட்டதனால், நாட்டிற்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
மக்கள் வங்கியை சீனா மட்டும் கறுப்புப் பட்டியலிட்டுள்ள நிலையில், சர்வதேச நிறுவனங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த வங்கிக் கட்டமைப்பு குறித்து அவதானம் செலுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
குறிப்பாக அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான கடன் கடிதங்கள் விநியோகம் செய்யப்படும்போது இவ்வாறான நெருக்கடி நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதன் காரணமாக இலகு தவணை முறையில் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு பணம் செலுத்துவதற்கு முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் ஆசிய நிறுவனங்கள் இலங்கையுடன் கொடுக்கல் வாங்கல் செய்ய அச்சம் வெளியிட்டுள்ளன.
எனவே மக்கள் வங்கி கறுப்பு பட்டியலில் இடப்பட்டுள்ளமையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும், அவ்வாறு செய்தால் சர்வதேச நிறுவனங்களுடன் கொடுக்கல் வாங்கல் செய்வது இலகுவாக அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படவிருந்த சேதன உரம் தொடர்பான பிரச்சினையினால் மக்கள் வங்கியை சீனா கறுப்பு பட்டியலிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.