தயவு தாட்சண்யம் வேண்டாம் ; பொலிஸாருக்கு முதலமைச்சர் விஜய் கடும் உத்தரவு!
கடுங் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது விரைந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று பொலிஸாருக்கு தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் கடும் உத்தரவு பிறப்பித்துள்ளதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.
தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் இன்று (25) தலைமைச் செயலகத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், வழக்கினை விரைவுபடுத்துவது குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும், பொலிஸ் பிரிவு, சமூகநலத்துறை மற்றும் அரசு தலைமை சட்டத்தரணியுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

இதன்போது பாலியல் குற்ற வழக்கினை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வலியுறுத்தினார். வழக்கினை முறையாக நடத்தி, கடும் தண்டனை பெற்றுத்தருவது குற்றச் செயல்களில் ஈடுபடத் திட்டமிடுவோரைத் தடுக்கும் விதமாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
கூட்டத்தில் தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க. மணிவாசன், அரசு தலைமை சட்டத்தரணி விஜய் நாராயண், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலாளர் மரியம் பல்லவி பல்தேவ், பொலிஸ் பிரிவு தலைமை பணிப்பாளர் டாக்டர் சந்தீப் ராய் ரத்தோர், பொலிஸ் பிரிவு மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் பலரும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.