விழுந்து நொருங்கி விபத்துக்குள்ளான உலங்குவானூர்தி மீட்பு
மாதுருஓயா நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளான பெல் 212 உலங்குவானூர்தி தற்போது மீட்கப்பட்டுள்ளது.
இதற்கான நடவடிக்கைகள் கடற்படையின் சுழியோடல் பிரிவு மற்றும் கடலோர காவல்படையின் எண்ணெய் கசிவு மீட்புக் குழுக்களால் இணைந்து மேற்கொள்ளப்பட்டன.
இதனிடையே விபத்து குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள விமானப்படைத் தளபதி தலைமையிலான 9 பேர் கொண்ட குழு இன்று விபத்து நடந்த இடத்துக்கு நேரில் சென்று ஆய்வுகளை நடத்தியதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இந்த விபத்தில் இரண்டு விமானப்படை சிப்பாய்களும், இராணுவ விசேட அதிரடிப் படையின் நான்கு சிப்பாய்களும் உயிரிழந்தனர். உயிரிழந்த ஆறு பேரின் பிரேத பரிசோதனைகள் இன்று நடத்தப்பட்டதுடன், அதன் முடிவுகளுக்கமைய, அவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகத் தெரியவந்தது.
இந்தநிலையில் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் அவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலன்னறுவை வைத்தியசாலை காவல்துறையினர் தெரிவித்தனர்.
விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 உலங்குவானூர்தி ஒன்று நேற்று காலை மாதுருஓயா நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் மரணித்தனர்.
ஹிங்குரக்கொட முகாமிலிருந்து பயிற்சிக்காக புறப்பட்ட பெல் 212 உலங்குவானூர்தியே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான 6 பேர் பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டனர்.