புதிய உருமாற்றத்துடன் மீண்டும் கொவிட் ; உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
உலகளவில் அண்மைக் காலமாகப் பரவி வரும் கொவிட்-19 இன் புதிய உருமாற்றமடைந்த 'சிக்காடா' (Cicada - BA.3.2) திரிபு குறித்து உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட சர்வதேச சுகாதார அமைப்புகள் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றன.
அமெரிக்கா உட்பட 23 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள இந்தத் திரிபு, ஒமிக்ரோன் வகையிலிருந்து உருமாற்றமடைந்த நிலையில், இதில் 70-க்கும் மேற்பட்ட பிறழ்வுகள் காணப்படுவதால் இது நோய் எதிர்ப்பு சக்தியிலிருந்து தப்பிக்கும் ஆற்றலைக் கொண்டிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

நீண்ட காலம் மறைந்திருந்து திடீரென வெளிப்பட்டதால் 'சிக்காடா' பூச்சியின் பெயரால் அழைக்கப்படும் இந்தத் திரிபு, தற்போது ஐரோப்பாவின் சில பகுதிகளில் வேகமாகப் பரவி வருகின்ற போதிலும், இது முந்தைய திரிபுகளை விடக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துவதாக இதுவரை ஆதாரங்கள் கண்டறியப்படவில்லை.
இருமல், சோர்வு, தொண்டை வலி மற்றும் இலேசான காய்ச்சல் போன்ற சாதாரண அறிகுறிகளே தென்படுவதாகவும், தற்போதுள்ள தடுப்பூசிகள் தீவிர பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பு அளிப்பதாகவும் தெரிவித்துள்ள நிபுணர்கள், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.