மன்னாரில் கொலை வழக்கில் கைதான நால்வருக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு!
மன்னாரில் தச்சினாமருத மடு பகுதியில் நபரொருவர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் வெடிபட்டு மரணம் அடைந்தமை தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் 4 பேர் 25-03-2022 அன்று கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இதேவேளை, குறித்த வழக்கானது இன்றைய தினம் (08-05-2023) திங்கட்கிழமை மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு முன்னிலைப்படுத்தப்பட்டது.
இதன்போது, குறித்த மரணம் இறந்த நபரின் கவனக்குறைவினால் ஏற்பட்டதாக பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட முதல் அறிக்கையினையும் மேற்கொள்காட்டி சந்தேக நபர்கள் சார்பில் தோன்றிய சட்டத்தரணி செ.டினேசன் அவர்களினால் சமர்பணம் மேற்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வழக்கின் மடு பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட கடந்த கால அறிக்கை மற்றும் சாட்சிகளின் வாக்கு மூலங்களின் அடிப்படையில் குறித்த நான்கு சந்தேக நபர்களும் வழக்கிலிருந்து மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதியால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கொலை தொடர்பான வழக்குகளில் மேல் நீதி மன்றத்தின் ஊடாகவே பிணை வழங்கப்படுகின்ற நிலையில் குறித்த இந்த வழக்கில் விசேட காரணங்களின் அடிப்படையில் நீதவான் நீதிமன்றத்தினால் சந்தேக நபர்கள் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.