கபில சந்திரசேன வழக்கில் முக்கிய சாட்சிகளை அழைக்க நீதிமன்ற உத்தரவு
கபில சந்திரசேனவின் மரண விசாரணைக்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன மற்றும் சட்டத்தரணி உதார முஹந்திரம் ஆகியோரை சாட்சியமளிக்க அழைப்பதற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, குறித்த இருவரையும் சாட்சியமளிக்க அழைக்கும் வகையில் கொழும்பு கோட்டை பிரதான நீதவான் பசன் அமரசிங்க இன்று (02) அவர்களுக்கு அழைப்பாணை விடுத்துள்ளார்.

மரணமடைந்தவரின் கையடக்கத் தொலைபேசியை எப்.பி.ஐ (FBI) ஊடாக அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்திற்கு அனுப்பி வைப்பதற்கு நீதி அமைச்சின் ஊடாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு இன்று நீதிமன்றில் தெரிவித்தனர்.
இதன்போது, மரணமடைந்தவரின் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட பச்சை நிறப் பட்டியை அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைப்பதற்காகக் குறித்த பிரிவு விடுத்த கோரிக்கைக்கும் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
சாட்சிச் சட்டத்தின் 126 ஆம் பிரிவின் பிரகாரமும், உயர் நீதிமன்ற சட்ட இலக்கம் 31 இன் விதிகளின் பிரகாரமும், மரணமடைந்த கபில சந்திரசேனவிற்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் அல்லது அவரது சாட்சிகளான ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன மற்றும் சட்டத்தரணி உதார முஹந்திரம் ஆகியோருக்கு வழங்கப்பட்ட எழுத்துமூல அல்லது வாய்மூல விடயங்களை வெளிப்படுத்த வேண்டாம் எனத் தீர்மானித்ததாக நீதவான் தனது உத்தரவின் போது தெரிவித்தார்.
19 மற்றும் 20 ஆவது சாட்சிகளுக்கு அழைப்பாணை விடுத்த நீதவான், குறித்த இரு சாட்சிகளையும் எதிர்வரும் 05 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டதுடன், வழக்கு விசாரணையை அன்று வரை ஒத்திவைத்தார்.