பியூமி ஹன்சமாலி தொடர்பில் நீதிமன்றம் விடுத்த உத்தரவு
இலங்கை நடிகையும், மொடலுமான பியூமி ஹன்சமாலி மற்றும் பிரபல வர்த்தகர் விரஞ்சித் தம்புகல ஆகியோருக்கு எதிரான சட்டவிரோதமாக சொத்து குவிப்பு வழக்கு அறிக்கை வரும் ஜூலை மாதம் 31 ஆம் திகதி சம்ர்ப்பிக்க கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த இருவர் மீதான விசாரணைகள் தொடர்பான முன்னேற்ற அறிக்கையை எதிர்வரும் ஜூலை மாதம் 31 ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு கொழும்பு மேலதிக நீதவான் நேற்று (03) உத்தரவிட்டுள்ளார்.
இறைவரித் திணைக்களத்தினால் நீதிமன்றில் வழக்கு
உள்நாட்டு இறைவரி சட்டத்தின் 190ஆம் பிரிவின் கீழ், பியூமி ஹன்சமாலி மற்றும் விரஞ்சித் தம்புகல ஆகியோர் சட்டவிரோதமாக சொத்துக்களைச் சம்பாதித்துள்ளார்களா என்பது தொடர்பில் விசாரணைகளை நடத்த உத்தரவு பிறப்பிக்குமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நேற்றைய தினம்(3) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி குறித்த வழக்கு தொடர்பில் உரிய ஆவணங்களைச் சரி பார்ப்பதற்காக பியூமி ஹன்சமாலி மற்றும் விரஞ்சித் தம்புகல ஆகியோரின் வீடுகளைச் சோதனையிட்ட போது இருவரும் அவர்களது வீட்டில் இருக்கவில்லை என நீதிமன்றில் தெரிவித்தார்.
இதனை கருத்தில் கொண்ட நீதவான் வழக்கு தொடர்பான முன்னேற்ற அறிக்கையை எதிர்வரும் ஜூலை மாதம் 31 ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.