வாஸ் குணவர்தன மனைவி தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மனைவி சியாமலி குணவர்தன மற்றும் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் இந்திக புஷ்பகுமார ஆகியோருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவர்களை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இன்று அறிவித்துள்ளார்.
மாணவர் தாக்கப்பட்ட விவகாரம்
மாலபே சைட்டம் நிறுவனத்தின் மாணவரான நிபுண ராமநாயக்கவை பலவந்தமாக கடத்திச்சென்று, குரூரமாக தாக்குதல் மேற்கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் ஆறாவது பிரதிவாதியாக சியாமலி குணவர்தன பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, வாஸ் குணவர்தன மற்றும் அவரின் மகனான ரவிந்து குணவர்தன உள்ளிட்ட மேலும் 06 பிரதிவாதிகள் மன்றில் ஆஜராகியிருந்தனர்.
எனினும், இரண்டு பிரதிவாதிகள் மன்றில் ஆஜராகாமையால், வழக்கு விசாரணையை எதிர்வரும் நவம்பர் மாதம் 28 ஆம் திகதி வரை ஒத்திவைத்த நீதவான், மன்றில் ஆஜராகாத பிரதிவாதிகளுக்கு பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளார்.