வாத்தியக் கலைஞரை பூசாரியுடன் சேர்ந்து கொன்று புதைத்த நண்பனுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
நண்பரைச் சந்திக்கச் சென்ற மேள வாத்தியக் கலைஞரான துஷ்மந்த சந்துருவனைக் கொலை செய்து சடலத்தை வாய்க்கால் கரையில் புதைத்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்களையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காணாமல் போய் 06 நாட்களின் பின்னர், நேற்று சனிக்கிழமை (28) இரவு கெஸ்பேவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சமன் கமகேவுக்கு இரகசியத் தகவலாளி ஒருவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு கிடைத்திருந்தது.

மேலதிக விசாரணை
காணாமல் போயிருந்த துஷ்மந்தவை, மஞ்சு என்பவரும் அவரது நண்பர்கள் குழுவும் இணைந்து கொலை செய்துள்ளதாக அத்தகவலாளி தெரிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில், கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான மஞ்சு மற்றும் மற்றுமொருவர் கஹபொல பிரதேசத்திலும், தேவாலயத்திற்குப் பொறுப்பான பூசாரி ஹெரலியாவல பிரதேசத்திலும் வைத்துக் கைது செய்யப்பட்டனர்.
அத்துடன், கொலையின் பின்னர் மறைத்து வைக்கப்பட்டிருந்த துஷ்மந்தவின் மோட்டார் சைக்கிள் மற்றும் பயணப் பொதி என்பனவும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
இந்தக் கொலைச் சம்பவத்தை இரண்டாவது சந்தேகநபர் தனது கையடக்கத் தொலைபேசியில் காணொளியாகப் பதிவு செய்து பின்னர் அதனை அழித்துள்ளமை தெரியவந்துள்ளதுடன், குறித்த தொலைபேசி அரச இரசாயனப் பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்படவுள்ளதுடன், புதைக்கப்பட்டுள்ள துஷ்மந்தவின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) தோண்டி எடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.