பிரபல பாடசாலைக்குள் கத்திக் குத்து ; மாணவனுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அநுராதபுரம் - எப்பாவலை நகரில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி பயிலும் உயர்தர வகுப்பு மாணவர்கள் 3 பேரை கத்தியால் குத்திக் காயப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான மாணவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது 10 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறு தம்புத்தேகம நீதிமன்ற பிரதான நீதிவான் காயத்திரி ஹெட்டியாராச்சியால் உத்தரவிடப்பட்டுள்ளது.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் எப்பாவல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு இன்று (15) தம்புத்தேகம நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே நீதிவானால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தீவிர விசாரணை
அத்துடன் குறித்த மாணவனை தந்தையிடம் ஒப்படைக்குமாறும் தம்புத்தேகம வைத்தியசாலையின் மனோ வைத்திய அதிகாரியிடம் காண்பிக்குமாறும் நீதிவான் மேலும் உத்தரவிட்டுள்ளார்.
எப்பாவல பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட உயர்தர வகுப்பு மாணவன் ஒருவரே சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் எப்பாவல பிரபல பாடசாலையொன்றில் கல்வி பயிலும் உயர்தர வகுப்பு மாணவர்கள் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக குறித்த மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக அநுராதபுரம் எப்பாவல பொலிஸார் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.