முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 08 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் நீதிமன்றம் இன்று (25) உத்தரவிட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரசன்ன ரணவீர, மஹர நீதவான் ஜனிதா பெரேரா முன்னிலையில் இன்றைய தினம் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக தலைமறைவு
2010 ஆம் ஆண்டில் போலி ஆவணங்களை தயாரித்து கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள அரச காணி ஒன்றை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் பிரசன்ன ரணவீரவை கைது செய்யுமாறு நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
ஆனால், முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர நீதிமன்றில் சரணடையாமல் பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்று நீண்ட காலமாக தலைமறைவாக இருந்தார்.
பின்னர், முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர கடந்த மே மாதம் 07 ஆம் திகதி நீதிமன்றில் சரணடைந்ததையடுத்து, தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், இந்த வழக்கு தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சிங்கப்பூர் சரத் எனப்படும் தொன் சரத் குமாரவும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 08 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.