சுரேஷ் சலே தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு!
சுரேஷ் சலே தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்புகளில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் காணொளிகளை சேகரிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னாள் அமைச்சர்களான உதய கம்மன்பில, விமல் வீரவன்ச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர உள்ளிட்ட ஆறுபேரும் நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றம் சுமத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நடவடிக்கை எடுத்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் திணைக்களம் கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேனவிடம் நேற்றையதினம் அறிவித்தது.

சிஐடி விடுத்த கோரிக்கை
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பாக கடந்த காலங்களில் ஊடகவியலாளர் சந்திப்புகளில் இவர்கள் மேற்கொண்ட கருத்துகளுக்கு உரிய, தொகுக்கப்படாத காணொளிகளைப் பெற்றுக் கொள்ளுமாறு, அரச மற்றும் தனியார் ஊடக நிறுவனங்களுடன் நீதவான் இதன்போது உத்தரவிட்டார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் சுரேஷ் சலே குறித்து, இவர்கள் மேற்கொண்ட கருத்துகள் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்து சிஐடி விடுத்த கோரிக்கையை ஏற்று நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.