நீதிமன்ற அவமதிப்பு விவகாரம் ; உதய கம்மன்பில உள்ளிட்ட ஆறு பேர் தொடர்பில் அதிரடி உத்தரவு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, அசங்க நவரத்ன உள்ளிட்ட ஆறு அரசியல் பிரமுகர்கள் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் ஊடகங்களில் கருத்து வெளியிட்டதாகக் கூறப்படும் விவகாரத்தை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு கோட்டை நீதவான் நேற்று (05) திறந்த நீதிமன்றத்தில் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளர்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணை மற்றும் தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே தொடர்பான விசாரணைகளைப் பாதிக்கும் வகையில், இலத்திரனியல் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக நீதிமன்றத்தை அவமதிக்கும் கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தண்டனைக்குரிய குற்றம்
குறித்த கருத்துகளை வெளியிட்டவர்களாக முன்னாள் நாடா ளுமன்ற உறுப்பினர்கள் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர, சுகீஷ்வர பண்டார, அசங்க நவரத்ன மற்றும் மகிந்த பதிரண ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அத்துடன், 2024ஆம் ஆண்டின் 8ஆம் இலக்கச் சட்டத்தின் கீழ் இவ்வாறான கருத்துகள் தண்டனைக்குரிய குற்றமாக அமையக்கூடும் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் கடந்த ஜூன் 7ஆம் திகதி முதல் ஒளிபரப்பான சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளின் திருத்தப்படாத (Unedited) காணொளிகளை சம்பந்தப்பட்ட ஊடக நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.