கொரோனா தடுப்பூசி தொடர்பில் நாட்டு மக்கள் வீண் அச்சமடையத் தேவையில்லை!
இலங்கையில் தற்போது அஸ்ட்ரசெனிகா , சைனோபார்ம் மற்றும் ஸ்புட்னிக் ஆகிய தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.
இவற்றில் ஏதேனுமொன்றை முதற்கட்டமாக பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாம் கட்டமாகவும் அதே தடுப்பூசியே வழங்கப்படும். இது குறித்து மக்கள் வீண் அச்சமடையத் தேவையில்லை என்று சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அதன் பணிப்பாளர் வைத்தியர் தினேஷ் கொக்கலகே இதனைத் தெரிவித்தார்.
மாற்று தடுப்பூசி வழங்குவது தொடர்பில் ஆராயப்படுமானால் உலக நாடுகளில் முன்னெடுக்கப்படுகின்ற முறைமை மற்றும் மருத்துவத்துறை நிபுணர்களின் ஆலோசனைக்கு அமையவே அதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.
எனினும் இதுவரையில் கலப்பு தடுப்பூசி வழங்குவது தொடர்பில் சுகாதார அமைச்சு எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என்றும் வைத்தியர் தினேஷ் கொக்கலகே குறிப்பிட்டார்.