இளம் தாய் ஒருவரின் உயிரை பறித்த கொரோனா: துயரத்தில் இரு பிள்ளைகள்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இளம் தாய் ஒருவர் புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரங்குளி நல்லாந்தொழுவ பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இரு பிள்ளைகளின் தாய் ஒருவரே நேற்று (28) செவ்வாய்க்கிழமை மரணமடைந்துள்ளார்.
புத்தளம் தள வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக குறித்த இளம் தாய் மூன்று நாட்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஆன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சைப் பிரிவில் குறித்த தாயை அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளனர்.
இந்நிலையே நேற்று (28) செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி குறித்த இளம் தாய் உயிரிழந்துள்ளதாக புத்தளம் மற்றும் கற்பிட்டி பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் தெரிவித்துள்ளார்.
மேலும் மரணமடைந்த இளம் தாய்க்கு ஐந்து மாதங்களுக்கு முன்னர் தான் மூன்றாவது குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளதாகவும் விசாரணை மூலம் தகவல் தெரியவந்துள்ளது.
குறித்த இளம் தாயின் ஜனாஸா, உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் நல்லடக்கத்திற்காக ஓட்டமாவடிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் தெரிவித்துள்ளார்.