சீனாவில் மீண்டும் வந்த கொரோனா; முக்கிய இடங்களை மூட உத்தரவு!
சீனாவில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் அங்குள்ள பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சீனாவின் வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் மீண்டும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஐந்தாவது நாளாக தொற்று அதிகமானோருக்கு பரவியதை அடுத்து பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க 40 லட்சம் பேர் வசிக்கும் லான்சோ நகரில் இருந்து மக்கள் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதோடு லான்சோ நகரில் இருந்து பிற மாகாணங்களுக்கு செல்ல விரும்புபவர்கள் கொரோனா நெகடிவ் சான்றிதழை கட்டாயம் காண்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜியான் மற்றும் லான்சோ இடையே 60 சதவீத விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அதிக அளவிலான பொதுமக்களிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும், சுற்றலா தலங்களை உடனடியாக மூடவும் மாகாண அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை நிலக்கரி இறக்குமதிக்காக மங்கோலியாவில் இருந்து வந்தவர்கள் மூலம் சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.