இலங்கையில் தீவிரமாக அதிகரிக்கும் கொரோனா: எச்சரிக்கை விடுத்த சுகாதாரத் தரப்பு
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தீவிரமாக அதிகரித்து வருகிறது. இதன் பாரதூரத்தன்மையைக் கருத்திற் கொண்டு திருமணம் , மரண சடங்கு , அரச உத்தியோகத்தர்களை பணிக்கு அழைத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இன்றைய தினம் சில முக்கிய தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.
இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண கொரோனா நிலைமை தொடர்பில் தெரிவிக்கையில் ,
கீழ் மட்டத்தில் காணப்படுகின்ற நிலைமை மிகவும் அபாயமுடையதாகவும் கவலைக்குரியதாகவும் உள்ளது. நாட்டின் சகல மாவட்டங்களிலும் அசாதாரணமான வகையில் தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர்.
கீழ் மட்டத்திலிருந்து அவதானிக்கும் போது எதிர்வரும் இரு வாரங்களின் இந்த தொற்றாளர் எண்ணிக்கையானது சுகாதார கட்டமைப்பிற்கு கட்டுப்படுத்த முடியாதளவிற்கு சிகிச்கையளிக்க முடியாதளவிற்கு அதிகரிக்கும். இந்த நிலைமையை முன்னரே நாம் சுட்டிக்காட்டியிருந்தோம்.
ஒரு மாதத்திற்கு முன்னரே நாட்டில் இவ்வாறானதொரு நிலைமை ஏற்படக் கூடும் என்று நாம் எச்சரித்திருந்தோம். கொவிட் கட்டுப்படுத்தல் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கும் மக்களுக்கு தேவைக்கு அதிகமாகவே நாம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளோம்.
ஆனால் எமது எச்சரிக்கை தொடர்பில் சுகாதார அமைச்சு உள்ளிட்ட எவரும் கவனத்தில் கொள்ளவில்லை. எம்மிடமும் அது பற்றி கேட்டறியவில்லை.
இந்த நிலைமை எதிர்வரும் இரு வாரங்களில் மிகவும் அபாயமுடையதாகவும் கவலைக்குரியதாகவும் மாற்றமடையும். தொற்றாளர்களின் எண்ணிக்கையுடன் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்கிறது.
கம்பஹா உள்ளிட்ட மாவட்டங்களில் சடுதியாக தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால் அவர்களை துரிதமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதிலும் பொது சுகாதார பரிசோதகர்கள் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். இவற்றுக்கிடையில் கடந்த ஓரிரு தினங்களில் மாத்திரம் 8 பொது சுகாதார பரிசோதகர்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது.
இவர்களில் இருவருடைய முழு குடும்பமும் தொற்றுக்கு உள்ளாகியுள்ளது. இதே போன்று ஏனைய சுகாதார தரப்பினரும் அதிகளவில் தொற்றுக்கு உள்ளாகின்றனர். எனவே சுகாதார கட்டமைப்பு சரிவடையும் காலம் வெகுதொலைவில் இல்லை என்றார்.