வவுனியாவில் கும்பாவிசேகம் நிகழ்வில் கொரோனா தொற்றாளர்கள்: 30 வீடுகள் தனிமை
பிள்ளையார் ஆலயம் ஒன்றில் சுகாதார அறிவுறுத்தல்களை மீறி கும்பாவிசேகம் நிகழ்வு இடம்பெற்ற நிலையில் அங்கு கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டமையால் ஆலயம் மற்றும் 30 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, ஓமந்தை, நொச்சிக்குளம் சித்திவிநாயகர் ஆலயத்தில் கும்பாவிசேகம் நடத்துவதற்கு ஆலய நிர்வாகத்தினரால் சுகாதாரப் பிரிவினரிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது.
தற்போதைய கொரோனா பரவல் நிலையை அடிப்படையாக கொண்டு ஆலய நிர்வாகத்தினர், உபயகாரர் என 9 பேருக்கே சுகாதாரப் பிரிவினர் அனுமதி வழங்கியிருந்தனர்.
ஆனால், குறித்த ஆலயத்தில் 20 பேருக்கு மேல் நிற்பதாகவும் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும் சுகாதாரப் பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து அங்கு சென்ற சுகாதாரப் பரிசோதகர்கள் சுகாதார பிரிவினரின் அறிவுறுத்தலை மீறி ஆலயத்தில் நின்ற 20 பேரிடமும் கொரோனா அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்டனர்.
இதில் ஆலய குருக்கள் உட்பட 6 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டதுடன், ஆலயத்திற்கு வந்து சென்றோர் மற்றும் தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தோர் ஆகியோரிடமும் மேற்கொள்ளப்பட்ட கொரோனா அன்டிஜன் பரிசோதனையில் மேலும் 7 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஆலய கும்பாவிசேக நிகழ்வுடன் தொடர்புபட்ட 13 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டதையடுத்து ஆலயம் மற்றும் 30 வீடுகள் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.