நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைக்கும் கொத்தமல்லி
நீரிழிவு நோய் வளர்சிதை மாற்றத்தினால் உண்டாகும் நோயாகும். நீரிழிவைக் கட்டுக்குள் வைக்க வேண்டுமென்றால் அதற்கு வாழ்க்கை முறை மாற்றமும் உணவுப் பழக்கமும் முக்கியம்.
சர்க்கரை நோயாளிகள் உணவுமுறையினையும் உடலியல் செயற்பாடுகளினையும் முறையாகப் பேண வேண்டும். உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கொண்ட உணவுகளை அன்றாடம் உண்ண வேண்டும்.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் எளிய பொருட்களைப் பயன்படுத்தி நீரிழிவு நோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
கொத்தமல்லி ரத்தத்தில் குளுக்கோஸின் அளவைக் குறைப்பதாக பல ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன. கொத்தமல்லி விதைகளை கொரகொரப்பாக லேசாக பொடித்து ஒரு பெரிய பாத்திரத்தில் நீர் சேர்த்து இரவு முழுவதும் ஊற விட வேண்டும்.
காலையில் அந்த நீரை வடிகட்டி எடுத்து வைத்து நாள் முழுவதும் தாகம் எடுக்கும்போது இந்நீரைப் பருக வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் ஒரு கப் அளவு எடுத்து கொதிக்க வைத்து டீ போலவும் குடித்து வரலாம்.
கொத்தமல்லி விதையில் ஜீரண ஆற்றலை மேம்படுத்தும் தன்மை உண்டு. இதில் நிறைய சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் இருக்கின்றன.
இவை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி ஜீரண ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். நீரிழிவு நோயாளிகளுக்கு இருக்கிற மிக முக்கியமான பிரச்சினைகளுள் ஒன்று ஜீரணக் கோளாறும் அதனால் ஏற்படும் வளர்சிதை மாற்றக் கோளாறுகளும் தான்.
அவற்றை சரிசெய்ய இந்த கொத்தமல்லி விதை குடிநீர் பயன்படுகிறது. கொத்தமல்லி விதை இன்சுலின் உற்பத்தியைத் தூண்டவும் அவை செல்களுக்குச் சரியான அளவில் கிடைக்கவும் தூண்டுகிறது.
கணையத்திலிருந்து சுரக்கும் இன்சுலினை சரியான அளவில் பீட்டா செல்களுக்குக் கடத்த உதவுகிறது. ஆகவே கொத்தமல்லி விதைகளை உபயோகப்படுத்தி நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருப்போம்.