ஜனாதிபதி மாளிகை செப்பு உருண்டைகளுடன் சிக்கிய மூவர்!
ஜனாதிபதி மாளிகையில் திரை அணிகலன்களாக பயன்படுத்தப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட 40 செப்பு உருண்டைகளை திருடிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
ஜூலை மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் எழுச்சியைத் தொடர்ந்து ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தை போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்தனர். அதன்போது, சந்தேகநபர்கள் அங்கிருந்த பெறுமதிமிக்க பொருட்களை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் ஜனாதிபதி மாளிகையில் இருந்த செப்பு உருண்டைகளை பழைய உலோகமாக விற்பனை செய்ய முற்பட்ட இவர்கள் வெலிக்கடை பொலிஸாரால் நேற்று (24) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான 28, 34 மற்றும் 37 வயதுடைய சந்தேகநபர்கள் ராஜபகிரிய ஒபேசேகரபுர பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் போதைக்கு அடிமையாகி இருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் விசேட பொலிஸ் குழுவிடம் சந்தேகநபர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கபப்டுகின்றது.