திருகோணமலை மூதூர் பிரதேச சபை ; ஆட்சியமைப்பது தொடர்பிலான தீர்மானத்தால் வெடித்த சர்ச்சை
திருகோணமலை மூதூர் பிரதேச சபைக்கான ஆட்சி தனி முஸ்லிம் உறுப்பினர்களை கொண்டே அமைக்கவேண்டும் என தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூராட்சி தேர்தல் முடிவடைந்து பல நாட்கள் கடந்துள்ள நிலையில் இன்னும் பல உள்ளூராட்சி மன்றுகளில் எந்த கட்சி ஆட்சியமைப்பது என்பது தொடர்பிலான முடிவுகள் எட்டப்படாமலேயே உள்ளன.
இந்நிலையில் திருகோணமலை மூதூர் பிரதேச சபையிலும் இதே சிக்கல் நிலவுவதுடன், உள்ளூராட்சி மன்றுகளில் எந்த கட்சி ஆட்சியமைப்பது என்பது தொடர்பில் பல்வேறு தொடர் கூட்டங்களும் இடம்பெற்று வந்தநிலையில் கூட்டத்தில் இறுதியாக எடுக்கப்பட்ட தீர்மானம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருகோணமலை மூதூர் பிரதேசம் தமிழர், முஸ்லிம்கள் இணைந்து வாழும் பகுதியாக காணப்படுகின்ற நிலையில் மூதூர் பிரதேச சபைக்கான ஆட்சி தனி முஸ்லிம் உறுப்பினர்களை கொண்டே (அவர்கள் எந்தக்கட்சி என்றாலும் பரவாய் இல்லை)அமைக்கவேண்டும் என தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத் தீர்மானமானது மதவாதமா? அல்லது இனவாதமா? என தமிழ் மக்களிடையே கேள்வியை எழுப்பியுள்ளதுடன், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.