அமைச்சர்களின் கல்வித் தகுதிகளால் தொடரும் சர்ச்சைகள்
ஜனாதிபதி அனுர அரசாங்கத்தின் மேலும் ஐந்து அமைச்சர்களின் கல்வித் தகுதிகள் மற்றும் பட்டங்கள் தொடர்பில் பல அரசியல் கட்சிகள் சந்தேகங்களை எழுப்பியுள்ளன.
நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்ச அநுர கருணாதிலக்கவின் கல்வித் தகுதி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடியின் பட்டம் தொடர்பிலேயே இவ்வாறு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
கல்வித் தகுதி திடீரென நீக்கம்
அந்த அரசியல் கட்சிகள் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அவர்களின் கல்வித் தகுதி குறித்த தகவல்களைப் பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்கின்றதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
அதேவேளை தேசிய மக்கள் கட்சியின் சில எம்.பி.க்கள், தமது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட கல்வித் தகுதிகளை திடீரென நீக்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அதோடு பொதுத் தேர்தல் பிரசாரப் பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளில் சில எம்பிக்கள் இந்தக் கல்வித் தகுதிகளை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.
இதேவேளை பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, தான் ஒரு சிறப்பு மருத்துவர் அல்ல எனவும் , கடந்த பொதுத் தேர்தல் காலத்தில், ஆதரவாளர்களால் உருவாக்கப்பட்ட பிரசார துண்டு பிரசுரங்களில் விசேட வைத்தியர் என குறிப்பிடப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
முதலில் அவற்றைப் பார்த்தபோது அவற்றைத் திருத்துமாறும், விநியோகிக்க வேண்டாம் என்றும் அறிவித்ததாகவும், ஆனால் தேர்தல் காலத்தில் எப்படியோ அவை விநியோகிக்கிப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனக்கு முன்கூட்டியே சிலரால் தெரிவிக்கப்பட்டதாகவும், தனது கல்வித் தகுதி குறித்து சமூக வலைதளத்தில் குறிப்பொன்றை வெளியிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் கல்வி தகுதி குறித்த சர்ச்சைகளால் அசோக ரன்வல சபாநாயர்கர் பதவியை இராஜினாமா செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.