தொடர் உண்ணாவிரத போராட்டம்; மற்றுமொரு உத்தியோகத்தர் வைத்தியசாலையில்
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மற்றுமொரு உத்தியோகத்தர் இன்று (30) காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
7 வருடங்களாகப் பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் தங்களை, உடனடியாக ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குமாறு கோரி, இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் கடந்த ஜனவரி 26 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்தது.

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் சத்தியாக்கிரகப் போராட்டம்
அதற்கு அதிகாரிகளிடமிருந்து உரிய பதில் கிடைக்காத காரணத்தினால், அவர்கள் அன்று மாலையே அதனை சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டமாகத் தீவிரப்படுத்தினர்.
சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று ஐந்தாவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது. உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த நால்வரில் ஒரு பெண்ணும் மற்றும் ஒருவரும் உடல்நிலை பாதிக்கப்பட்டதன் காரணமாக ஏற்கனவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
மீதமிருந்த இருவரும் தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், அவர்களில் ஒருவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து இன்று காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறப்படுகின்றது.