எரிபொருள் விற்பனையில் தொடர்ந்து நட்டம் ; பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எச்சரிக்கை
அண்மையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்ட போதிலும், விற்கப்படும் ஒவ்வொரு லிட்டர் எரிபொருளிலிருந்தும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்னும் கணிசமான நிதி நட்டத்தை எதிர்கொண்டு வருவதாக அதன் தலைவர் டி.ஜே. ராஜகருண தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அரசாங்கம் பொதுமக்களை பாதுகாக்க பெருமளவிலான மானியங்களை வழங்கி வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இந்த மானியங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி தற்போது வேகமாகக் குறைந்து வருவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.100 மற்றும் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.20 மானியமாக வழங்குவதற்காக அரசாங்கம் ரூ.57 பில்லியன் ஒதுக்கியிருந்தது.

இந்த நிவாரணம் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைமுறையில் இருந்ததுடன், ஜூன் மாதத்திலும் தொடர்ந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த நிதி ஜூன் மாத இறுதிக்குள் முழுமையாகத் தீர்ந்துவிடும் நிலையில் இருப்பதால், பொருளாதார ஸ்திரத்தன்மையை பாதுகாப்பதற்காகவே எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்டதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
அதேவேளை, எரிபொருள் இறக்குமதிக்காக வெளிநாட்டு நாணய செலவு கடுமையாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதங்களில் மாதத்திற்கு 100 முதல் 120 மில்லியன் டொலராக இருந்த இறக்குமதி செலவு, கடந்த மாதத்தில் 522 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலை வெளிநாட்டு நாணய சந்தையை பாதித்துள்ளதாகவும், தொடர்ந்தால் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளில் மேலும் உயர்வு ஏற்பட்டு பொருளாதாரத்தை பாதிக்கும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
இதனால் பொதுமக்கள் எரிபொருள் நுகர்வை குறைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, ஒரு லிட்டர் ஒட்டோ டீசலின் உண்மையான அடக்கவிலை ரூ.536 ஆக உள்ள நிலையில், அது ரூ.407க்கு விற்பனை செய்யப்படுவதாகவும், இதனால் ஒரு லிட்டருக்கு ரூ.29 நட்டம் ஏற்படுவதாகவும் கூறினார்.
அதேபோல், ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்கவிலை ரூ.494 ஆக இருந்தும், அது ரூ.434க்கு விற்பனை செய்யப்படுவதால் ரூ.60க்கும் அதிக நட்டம் ஏற்படுவதாகவும் தெரிவித்தார். இந்த நிதி நெருக்கடியை சமாளிக்க தேசிய எரிபொருள் கியூஆர் குறியீட்டு முறை 100% கட்டாயமாக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதன் மூலம் எரிபொருள் விநியோகத்தை டிஜிட்டல் முறையில் கண்காணிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
மேலும், சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முன்னர் இந்த முறைமையை முழுமையாக பின்பற்றவில்லை எனவும், இனி அதனை மீறுவோர் வழங்கப்பட்ட ஊக்குவிப்பு தொகைகள் மற்றும் நிதியுதவிகளை இழக்க நேரிடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.