நபரொருவரை கடத்தி பணத்தை கொள்ளையடித்த கான்ஸ்டபிள்கள்; நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
நபரொருவரை கடத்திச் சென்று பணத்தை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட வெலிக்கடை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு கான்ஸ்டபிள்கள் உட்பட நான்கு சந்தேக நபர்களும் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக வாழைத்தோட்ட பொலிஸார் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
வாழைத்தோட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று (26) கொழும்பு தலைமை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இவ்வாறு அறிவித்துள்ளனர்.
தடுத்து வைத்து விசாரணை
முன்வைக்கப்பட்ட உண்மைகளைக் கருத்திற் கொண்ட நீதவான், சந்தேக நபர்களை 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த பொலிஸாருக்கு அனுமதி அளித்துள்ளார்.
அதன்படி, சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸாருக்கு அனுமதி வழங்கிய நீதவான், விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர்கள் வாழைத்தோட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நபரொருவரை கடத்திச் சென்று 16 இலட்சம் ரூபா கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் வாழைத்தோட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.