சீனாவிலிருந்து இலங்கை வந்த நபரால் விமான நிலையத்தில் குழப்பம்
விமான நிலையத்தின் ஊடாக பன்றி இறைச்சியை நாட்டிற்கு கொண்டு வர அனுமதிக்காவிட்டால் விமான நிலைய அதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய்வதாக சீன நபர் ஒருவர் விமான நிலையத்தில் குழப்பத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பன்றி இறைச்சி
இதன்போது நிலைமையைக் கட்டுப்படுத்த விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்திருந்ததாகவும் சுங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Cathay Pacific விமானமான CX 611 இல் இலங்கை வந்த சீனப் பிரஜையான Liu Zongrong என்பவரின் பயணப் பொதியில் இருந்து 46 கிலோ பன்றி இறைச்சியை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து பன்றி இறைச்சி மற்றும் சீனப் பிரஜை விமான நிலையத்தின் விலங்குகள் மற்றும் தாவர தனிமைப்படுத்தல் பிரிவின் அதிகாரிகளிடம் சுங்க அதிகாரிகளால் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சீனாவில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல்
சீனாவில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் நோய் பரவி வரும் நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறி பன்றி இறைச்சியை நாட்டுக்குள் சீன பிரஜை கொண்டு வந்துள்ளார்.
இதன்போது இறைச்சியை நாட்டிற்கு கொண்டு செல்ல அனுமதிக்காவிட்டால், அதிகாரிகள் உடனடியாக இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்று அவர்கள் மிரட்டல் விடுத்துள்ளார்.
மேலும் சீனப் பிரஜையின் அச்சுறுத்தலான நடத்தையையும் மீறி, தனிமைப்படுத்தப்பட்ட பிரிவின் அதிகாரிகள் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட இறைச்சியை தங்கள் காவலில் எடுத்துள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் இறைச்சியை கொண்டு வந்த சீன நபர், சுங்க அதிகாரிகளால் சுங்கக் காவலில் ஒப்படைக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.