விவாகரத்து வழக்குக்குச் சென்ற தம்பதியரிடையே நீதிமன்ற வளாகத்தில் மோதல்
மட்டக்களப்பு நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு விசாரணைக்காகச் சென்று திரும்பிய கணவன், மனைவி மற்றும் மனைவியின் சகோதரன் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து மூவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை (18) மட்டக்களப்பு காந்தி பூங்கா பகுதியில் அமைந்துள்ள நீதிமன்ற வாகனத் தரிப்பிடத்தில் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
மட்டக்களப்பு பார் வீதியைச் சேர்ந்த கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பப் பிரச்சினை காரணமாக, கணவருக்கு எதிராக மனைவி விவாகரத்து வழக்குத் தாக்கல் செய்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், சம்பவ தினமான இன்று குறித்த வழக்கு விசாரணைக்காக மனைவி தனது சகோதரனுடன் நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளதுடன், கணவர் தனியாக நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
இதன்போது வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மூவரும் நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியேறி காந்தி பூங்கா பகுதியில் அமைந்துள்ள வாகனத் தரிப்பிடத்திற்குச் சென்றுள்ளனர்.
இதன்போது கணவன், மனைவியின் சகோதரனைத் தாக்க முற்பட்டதாகவும், இதனையடுத்து இருவருக்கும் இடையே கடும் கைகலப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இருவரும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து கீழே விழுந்து மோதலில் ஈடுபட்ட நிலையில், அங்கிருந்த பொதுமக்கள் தலையிட்டு அவர்களைப் பிரித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதலின்போது, கணவர் காரைச் செலுத்தி மைத்துனர் மீது மோதியதாகவும், இதற்குப் பதிலடியாக மைத்துனர் காரைத் தாக்கியதில் வாகனம் பலத்த சேதமடைந்ததாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தகவலறிந்த மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதனையடுத்து கணவன், மனைவி மற்றும் மனைவியின் சகோதரன் ஆகிய மூவரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திய பின்னர் கைது செய்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய காரும் பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.