டிஜிட்டல் கண் திரிபு அதிகரிப்பு ; நிபுணர்கள் வழங்கும் பரிந்துரைகள்
20 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களிடையே கணினி பார்வை நோய்க்குறி (CVS) அல்லது டிஜிட்டல் கண் திரிபு அதிகரித்து வருவதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
COVID-19 தொற்றுநோய் காலத்தில் வீட்டிலிருந்து வேலை செய்து ஒன்லைனில் படிக்கும் போக்கு அதிகரித்து வருவதால் இந்த நிலை கணிசமாக பரவியுள்ளது.
இதற்கு பிரதான காரணம் கணினிகள், கையடக்க தொலைபேசிகள் மற்றும் ஏனைய டிஜிட்டல் சாதனங்களை நீண்டகாலமாக பயன்படுத்துவதே என தேசிய கண் வைத்தியசாலையின் ஆலோசகர் கோயா சத்திரசிகிச்சை நிபுணர் குசும் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள தேசிய கண் மருத்துவமனையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் அவர் இதனை தெரிவித்தார்.
கண் அசௌகரியம், மங்கலான பார்வை, தலைவலி, சோர்வு மற்றும் வறண்ட கண்கள் ஆகியவை அறிகுறிகளாகும்.
மோசமான வெளிச்சம், டிஜிட்டல் திரைகளிலிருந்து வரும் கூச்சம் அல்லது சரிசெய்யப்படாத பார்வை பிரச்சினைகள் ஆகியவற்றாலும் இந்த நிலை மோசமடையக்கூடும்.
பெற்றோரின் மேற்பார்வை இல்லாமல் பல சிறுவர்கள் டிஜிட்டல் திரைகளுக்கு முன்னால் அதிக நேரம் செலவிடுகிறார்கள் என்று மருத்துவர் வலியுறுத்தினார்.
இந்த நிலையைத் தடுக்க வழக்கமான கண் பரிசோதனைகள் மற்றும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
கணிணி காட்சி திரையை (monitor) சரியாக வைப்பது, பிரகாசத்தைக் குறைப்பது, திரையின் பிரகாசத்தை சரிசெய்வது மற்றும் திரையை கண்களிலிருந்து கணிசமான தூரத்தில் வைத்திருப்பது ஆகியவற்றை அறிவுறுத்துகிறார்கள்.
ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் 20 அடி தூரத்தில் உள்ள ஒரு பொருளை 20 வினாடிகள் பார்ப்பது, அடிக்கடி கண் சிமிட்டுவது, போதுமான தண்ணீர் குடிப்பது மற்றும் சரியான தோரணையைப் பராமரிப்பது ஆகியவை பரிந்துரைக்கப்படுகின்றன.
கணினிகளுக்கான சிறப்பு கண்ணாடிகளை அணிவது மற்றும் வறட்சியைத் தடுக்க சொட்டு மருந்துகளை பயன்படுத்துவதை கண் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.