நவராத்திரி 3ம் நாளான வாராஹி அம்மன் வழிபாடு பற்றிய முழு விவரம்
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் முப்பெரும் தேவியர்களையும் வழிபட்டு, அவர்களின் அருளை பெறுவதற்கான காலமாகும். நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் அம்பிகையை துர்கையாகவும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் வழிபாடு செய்வது வழக்கம்.
நவராத்திரியின் முதல் நாளில் அம்பிகையை மகேஸ்வரியாகவும், இரண்டாவது நாளில் ராஜராஜேஸ்வரியாகவும் வழிபட்டு மகிழ்ந்தோம். மூன்றாவது நாள் என்பது துர்கை வழிபாட்டின் நிறைவு நாளாகும். அதனால் இந்த நாளை காளி வழிபாடு என்றும் சொல்லுவது உண்டு.
அம்பிகையின் மிகவும் சக்தி வாய்ந்த, உக்கிர வடிவமாக கருதப்படுவது காளி தான். காளியை துஷ்டசக்திகளின் தெய்வமாகவும் பலர் நினைப்பது உண்டு. இதனால் பெரும்பாலானவர்களுக்கு காளி என்பதுமே பக்தியை விட பயம் தான் வரும்.
ஆனால் உண்மையில் காளி, சாந்தம் குணம் உடையவள். தன்னுடைய பக்தர்களுக்கு, தன்னை நம்பி வந்து சரணடைபவர்களுக்கு யாராவது ஏதாவது தீங்கு செய்தாலோ, ஏதாவது துன்பம் என்றாலோ உக்கிர வடிவமாக மாறி கோபம் கொள்பவளும் காளி தான்.
அதனால் நம்முடைய தாங்க முடியாத துயரம், கஷ்டங்கள் தீர வேண்டும், விரைவாக நம்முடைய வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்பவர்கள் காளி வழிபாட்டினை மேற்கொள்வது சிறப்பு.
இந்த ஆண்டு நவராத்திரியின் மூன்றாவது நாள் செப்டம்பர் 24ம் தேதி அமைந்துள்ளது. நவராத்திரியின் மூன்றாவது நாளில் அம்பிகையை வாராஹியாக வழிபட வேண்டும். வாராஹி அல்லது வராஹி என்பவள் வராக மூர்த்தியின் பெண் வடிவம் என்றும், இவளே அன்னை பராசக்தியின் போர் படை தளபதியாக இருந்து, அன்னைக்கு வெற்றியை பெற்றுத் தந்தவள் என்றும் புராணங்கள் சொல்கின்றன.
இந்த நாளில் வீரம், ஆற்றல், வெற்றி ஆகியவை கிடைப்பதற்காக வாராஹியை வழிபடுவது சிறப்பு. இந்த வராஹி அம்மனை நவராத்திரியின் மூன்றாவது நாளில் எப்படி வழிபட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
நவராத்திரி 3ம் நாள் வழிபாடு
அம்பாளின் பெயர் - வாராஹி
கோலம் - மலர் வகை கோலம்
மலர் - சம்பங்கி
இலை - துளசி
நைவேத்தியம் - சர்க்கரை பொங்கல்
தானியம் - காராமணி சுண்டல்
பழம் - பலாப்பழம்
நவராத்திரியின் மூன்றாவது நாளில் ஸ்ரீவாராஹி மாலையை பாராயணம் செய்துவது சிறப்பு. இந்த நாளில் அம்பிகையை நான்கு வயது சிறுமியாக கருதி வழிபட வேண்டும். வாராஹி அன்னைக்குரிய மந்திரங்களை சொல்லி வழிபடுவது சிறப்பு.