ஈரான் மீண்டும் நீர்வழியை மூடியதால் ஹோர்முஸ் நீரிணையில் 'முழுமையான குழப்பம்'
ஈரான் மீண்டும் நீர்வழியை மூடியுள்ளதால், சர்வதேச ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையில் பெரும் குழப்பமான சூழல் நிலவுகிறது.
கடல் கண்காணிப்புத் தரவுகளின்படி, சனிக்கிழமையன்று இப்பகுதியில் கடும் பதற்றம் நிலவியது.
அனுமதியுடன் பயணித்த இந்திய எண்ணெய்க் கப்பல் ஒன்றை ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) தடுத்து நிறுத்தியதுடன், அதன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தித் திருப்பி அனுப்பியுள்ளது.

இதனால் அந்த கப்பல் மேற்கு நோக்கித் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நீரிணையைக் கடக்க முயலும் கப்பல்கள் ஈரானின் கடும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியுள்ளதுடன், மறுபுறம் அமெரிக்கக் கடற்படையின் முற்றுகையையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
இந்த இரட்டை நெருக்கடியால் சர்வதேச கப்பல் போக்குவரத்து முற்றுமுழுதாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போர்ச் சூழலைத் தவிர்க்கும் பொருட்டு, அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) வலியுறுத்தியுள்ளது.
ராஜதந்திர ரீதியில் இப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே வளைகுடா நாடுகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.