இலங்கை சித்தரவதை தாக்குதலுக்கு பொலிஸாருக்கு பயிற்சியளித்தது தொடர்பில் ஸ்கொட்லாந்துக்கு எதிராக முறைப்பாடு
சித்திரவதை தாக்குதலில் ஈடுபடும் இலங்கைப் பொலிஸாருக்கு ஸ்கொட்லாந்து பயிற்சி வழங்குவதற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இலங்கையில் அரசாங்கத்தின் ஆதரவுடன் சித்திரவதைகள் இடம்பெறுவது உறுதிப்படுத்தப்பட்டால் இலங்கை அதிகாரிகளிற்கு பயிற்சி வழங்குவதை ஸ்கொட்லாந்து நிறுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகளின் முன்னாள் விசேட அறிக்கையாளர் பேராசிரியர் மன்பிரெட் நொவாக் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஸ்கொட்லாந்து பொலிஸார் தங்களது பயிற்சிகள் சர்வதேச மனித உரிமை தராதரத்தில் முன்னேற்றத்தினை ஏற்படுத்துகின்றது என தெரிவித்துள்ளனர்.
எனினும் ஸ்கொட்லாந்து பொலிஸார் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதில் விவேகத்துடன் செயற்படவில்லை என விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. இலங்கை பொலிஸார் படைப்பிரிவினரிற்கான நீண்ட கால பயிற்சி திட்டம் தற்போது முட்டுக்கட்டை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இது குறித்து வெளிவிவகார அமைச்சு ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் திட்டமிட்டு சித்திரவதைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் உட்பட பலர் ஸ்கொட்லாந்தின் டுலியாலன் தலைமையகத்தில் பயிற்சி பெற்றுள்ளனர். இது தொடர்பில் ஸ்கொட்லாந்தின் தொழில் கட்சி அரசியல்வாதி மேர்செடெஸ் விலால்பா எழுதிய கடிதத்தில் கூறியதாவது, இலங்கை பொலிஸாரிற்கான ஸ்கொட்லாந்து பொலிஸாரின் பயிற்சி தேவையற்ற பாரம்பரியம் ஒன்றை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளதுஅது மனித உரிமை மீறல்களை மறைக்க உதவுகின்றது என அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2007 இல் தான் ஐ.நா.விற்கு அம்பலப்படுத்திய சித்திரவதை முறைகள் தொடர்ந்தும் பயன்படுத்தப் படுவது அச்சத்தை ஏற்படுத்துகின்றது எனத் தெரிவித்துள்ள மனித உரிமை சட்டத்தரணியும் மனித உரிமைகளிற்கான சர்வதேச கம்பஸ் அமைப்பின் செயலாளர் நாயகமுமான நொவாக் இலங்கை அகதிகளின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை ஸ்கொட்லாந்து பொலிஸார் ஆரம்பிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஸ்கொட்லாந்து நாடாளுமன்றம் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும்,ஸ்கொட்லாந்து பொலிஸாரும் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை தண்டிப்பதில் இலங்கை பொலிஸாருடன் இணைந்து செயற்படவேண்டும் என அவர் சண்டே போஸ்டிற்கு தெரிவித்தார். இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்காவிட்டால் அல்லது விசாரணைகளை முன்னெடுக்காவிட்டால் கடந்த காலங்களை போல இதனையும் சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் இவ்வாறான சித்தரவதை தாக்குதலுக்கு இலங்கை பொலிஸாருக்கு ஸ்கொட்லாந்து வழங்கும் பயிற்சியினை உடனடியாக நிறுத்தவும் வலியுறுத்தினார்.
சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தின் பிரான்சிஸ் ஹரிசன் ஸ்கொட்லாந்து முன்னொருபோதும் எடுக்கப்படாத இந்த நடவடிக்கையை ஸ்கொட்லாந்து முன்னெடுத்தால் அது சித்திரவதையில் ஈடுபட்டவர்கள் தப்பமுடியாது என்ற செய்தியை உலகிற்கு தெரிவிப்பதாக அமையும் என குறிப்பிட்டுள்ளார்.