கண்டி மாநகர சபை NPP உறுப்பினர் உணவக உரிமையாளர் மீது பொலிஸில் முறைப்பாடு
கண்டி மாநகர சபை தேசியமக்கள் சக்தி உறுப்பினர் ஒருவர் தன்னை உணவகம் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் அச்சுறுத்தியதாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
வட்டபுலுவ, துட்டுகெமுணு மாவத்தையிலுள்ள பிரசித்தி பெற்ற உணவகம் ஒன்றின் உரிமையாளரே தன்னைத் அச்சுறுத்தியதாக, கண்டி மாநகர சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் நாமல் கோரளகே கண்டி தலைமையகப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த ஹோட்டலினால் பிரதேச மக்களின் இயல்பு வாழ்க்கைக்குப் பாதிப்பு ஏற்படுவதாகவும், சூழலுக்குத் தீங்கு ஏற்படுவதாகவும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து மாநகர சபையில் தான் கருத்துக்களை முன்வைத்ததாகவும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இவ்வாறு அவர் தன்னை அச்சுறுத்தியாதாகத் தெரிவித்துள்ளார்.
குறித்த ஹோட்டலுக்கு அருகில் தான் நடந்து சென்றபோது, அதன் உரிமையாளர் அவரை வழிமறித்து, "நீதானே இந்த ஹோட்டலுக்கு எதிராக மனுக்களை சமர்ப்பிக்கிறாய்? உங்கள் அரசாங்கம் அதிக காலம் நீடிக்காது, பார்த்துக்கொள்வோம்" எனக் கூறி திட்டியதுடன் அச்சுறுத்தல் விடுத்ததாகவும் அவரது முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் இரு தரப்பினரையும் அழைத்து வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், பிணக்கைத் தீர்த்துக் கொள்வதற்காக மத்தியஸ்த சபைக்கு (Mediation Board) பாரப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.