போலி டின்மீன் தயாரித்த நிறுவனம் சுற்றிவளைப்பு
இலங்கையின் பிரபல நிறுவனமொன்றின் பெயரில் போலியாக டின்மீன் தயாரித்த நிறுவனமொன்றை நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் சுற்றி வளைத்துள்ளனர்.
நீர்கொழும்பு, தலாஹேன, துங்கல்பிட்டிய பிரதேசத்தில் போலி டின்மீன் உற்பத்தி நிறுவனமொன்று செயற்பட்டு வருவதாக நுகர்வோர் விவகாரங்கள் அதிகார சபைக்கு தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
மிகவும் அசுத்தமான முறையில் தயாரிப்பு
அதனையடுத்து, சுற்றிவளைத்து சோதனையிட்ட அதிகாரிகள், வேறொரு நிறுவனத்தின் பெயரில் போலியாக தயாரிக்கப்பட்டு பொதியிடப்பட்ட 425 கிராம் எடைகொண்ட 700 மீன்டின்களை கைப்பற்றியுள்ளனர்.
அத்துடன், அவர்கள் இலங்கை தரக் கட்டளைகள் நிறுவனத்தின் இலச்சினையையும் போலியாக பயன்படுத்தியுள்ளனர். மிகவும் அசுத்தமான முறையில் தயாரிக்கப்பட்டு, அவை பொதி செய்யப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடையவர்களைக் கண்டறிந்து சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.