நிறுவன கணக்கு உதவியாளரை கைது செய்த CID ; அதிர்ச்சி கொடுக்கும் பின்னணி
ஒழுங்கமைக்கப்பட்ட இணைய மோசடி கும்பலுக்கு தனது வங்கி கணக்கை பணத்திற்காக விற்ற சம்பவம் தொடர்பில், ஒரு தனியார் நிறுவனத்தின் கணக்கு உதவியாளர் ஒருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்துள்ளது.
தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதான இந்த சந்தேகநபர், தனது கணக்கை 20 நாட்களுக்குப் பயன்படுத்துவதற்கு அனுமதி அளித்தமைக்காக குறித்த கும்பலிடம் இருந்து சுமார் 40,000 ரூபாவுக்கு மேல் பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
வங்கி கணக்கை விற்ற உதவியாளர்
இந்த 20 நாட்களுக்குள் மட்டும், இந்த குற்றக் கும்பல் சந்தேகநபரின் கணக்கு ஊடாக சுமார் 20 இலட்சம் ரூபாவுக்கு மேல் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது, பணத்துக்கு வங்கிக் கணக்குகளை விற்பதன் மூலம் மேற்கொள்ளப்படும் பாரிய நிதி குற்றச் சங்கிலியின் ஒரு பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. WhatsApp மற்றும் telegram ஊடாக 'இணைய வணிகம்' என்று கூறி ஒரு நபரிடம் இருந்து 5,42,877 ரூபா மோசடி செய்யப்பட்டதாகக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.
மோசடி செய்யப்பட்ட பணத்தின் ஒரு பகுதி கைது செய்யப்பட்ட நபரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருந்ததால், அவர் மீது கவனம் செலுத்தப்பட்டது. வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட ஒரு நுணுக்கமான நடவடிக்கையில், மோசடி செய்யப்பட்ட பணம் இந்தச் சந்தேகநபரின் கணக்கு உட்பட 6 வங்கிக் கணக்குகள் இடையில் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளமை தெரியவந்தது.
இதே மோசடிச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேகநபர்கள் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட கணக்கு உதவியாளரின் கணக்கில் இருந்து வேறு கணக்குகளுக்குப் பணம் சென்ற விதம் குறித்து விரிவான விசாரணைகளை மேற்கொள்ள பொலிஸார் தற்போது நீதிமன்ற அனுமதியைப் பெற்றுள்ளனர்.
WhatsApp மற்றும் telegram மூலம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி மோசடிக்காரர்களால் இது இயக்கப்படும் ஒரு பரந்த வலையமைப்புடைய மோசடி என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறான வலையமைப்புகளில் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.