கைவரிசையை காட்ட கொழும்பிலிருந்து ஹட்டனுக்கு சென்ற நபர்; வசமாக சிக்கினார்
ஹட்டன் நகரிலுள்ள 3 வர்த்தக நிலையங்கள் இன்று அதிகாலை உடைத்து, அங்கிருந்த பணம் உள்ளிட்ட பொருள்களைத் திருடிய சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
ஹட்டன் நகரிலுள்ள கட்டட பொருள்கள் விற்பனை நிலையம், ஆடை வர்த்தக நிலையம் மற்றும் தொலைபேசி வர்த்தக நிலையம் என்பவற்றில் இன்று அதிகாலை 2 மணியிலிருந்து 4.30 மணி வரை உடைத்து சந்தேக நபர் திருடியுள்ளார்.
சந்தேகநபர் வர்த்தக நிலையங்களுக்குள் நுழைந்ததை அவதானித்த தனியார் பாதுகாப்பு பிரிவின் அதிகாரியொருவர், சம்பந்தப்பட்ட வர்த்தக நிலைய உரிமையாளருக்கு அது தொடர்பில் அறிவித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த வர்த்தக நிலைய பணியாளர்கள், அயலவர்கள் இணைந்து சந்தேகநபரைப் பிடித்து ஹட்டன் பொலிஸிடம் ஒப்படைத்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர் கொழும்பு- சப்புகஸ்கந்த பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் இவர் போதைப் பொருளுக்கு அடிமையானவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் தீபாவளி தினத்தை முன்னிட்டு, ஹட்டன் நகரில் விற்பனை நடவடிக்கைகள் அதிகம் இடம்பெறுவதால், திருட்டில் ஈடுபடும் நோக்கில் ஹட்டன் நகருக்கு வருகைத் தந்தாகவும் சந்தேகநபர் , விசாரணையில் தெரிவித்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.