90 ரூபாய்க்கு ஆசைப்பட்ட பல்பொருள் அங்காடிக்கு 5 லட்சம் அபராதம்!
நிர்ணயித்த விலையை மீறி அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த வெள்ளவத்தையிலுள்ள பிரபல பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இன்று 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் தகவல்படி, ஒரு கிலோ உள்ளூர் 'நாடு' அரிசியின் அரசாங்க நிர்ணய விலை 230 ரூபாய் ஆகும். குறித்த பல்பொருள் அங்காடி ஒரு கிலோ அரிசியை 320 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது.

90 ரூபாய் கூடுதலாக அறவிடப்பட்டுள்ளது
ஒரு கிலோ அரிசிக்கு நுகர்வோரிடமிருந்து 90 ரூபாய் கூடுதலாக அறவிடப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.
அரிசி விலையைச் செயற்கையாக உயர்த்தி நுகர்வோரைச் சுரண்டும் வர்த்தகர்களைக் கண்டறிய நுகர்வோர் விவகார அதிகார சபை நாடு தழுவிய ரீதியில் தொடர்ச்சியான அமலாக்க நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
அத்தியாவசியப் பொருட்களை வாங்கும் போது பொதுமக்கள் பொருட்களின் மீது அச்சிடப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலையை எப்போதும் சரிபார்க்கவும், நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதலாக ஒரு சதம் கூட செலுத்த வேண்டாம் என அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.
விலை விதிமீறல்கள் ஏதேனும் கண்டறியப்பட்டால், அது குறித்து முறையான ஆதாரங்களுடன் உடனடியாகப் புகார் அளிக்கவும், பொதுமக்கள் இது தொடர்பான புகார்களை நுகர்வோர் விவகார அதிகார சபையின் அவசர அழைப்பு இலக்கமான 1977 ஊடாகத் தொடர்பு கொண்டு பதிவு செய்யவும் முடியும் .