தமது நோக்கம் இதுவே! கொழும்பில் சஜித் வெளியிட்ட தகவல்
21 ஆவது திருத்தத்தை ஐக்கிய மக்கள் சக்தி எதிர்ப்பதாக வெளியான செய்தியை மறுப்பதாகவும், 21 ஆவது திருத்தத்தை இலங்கையிலும் நாடாளுமன்றத்திலும் ஐக்கிய மக்கள் சக்தியே முதன்முறையாக சமர்ப்பித்ததாகவும் எதிர்க் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்து 21 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதே தமது நோக்கமென கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
பத்தொன்பதாவது திருத்தத்தை மீண்டும் கொண்டுவருவதற்கும், அதற்கு பொருத்தமான முற்போக்கான முன்மொழிவுகளை முன்வைக்கவும், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி செயற்பட்டது.
அதன் ஊடாக 21 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதே எமது நோக்கம். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்தல், ஜனநாயகக் கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், அதிகாரங்களை கட்டுப்படுத்தும் தடைகள் மற்றும் சமன்பாடுகள், தேசிய பாதுகாப்பு சபையொன்றை ஸ்தாபித்தல் போன்ற முன்மொழிவுகள் அவற்றில் உள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, (Gotabaya Rajapaksa) ஜனாதிபதி பதவியில் நீடிப்பதற்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கிறேன். மக்கள் போராட்டத்திற்கு துரோகம் செய்பவர்களுக்கும் நான் எதிர்ப்பு தெரிவிக்கிறேன்.
மொட்டுவின் ஆசிர்வாதத்துடன் இணைந்து ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளவர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் அரசியலமைப்பு உருவாக்கப்படுவதை நான் எதிர்க்கிறேன்.
இரண்டரை வருடங்களுக்கு முன்னர் நாட்டு மக்கள் எடுத்த தீர்மானத்தை திரும்பிப் பார்க்கையில் எஞ்சியிருப்பது வங்குரோத்தான நாடும் வரிசை யுகமுமே- என்றார்.