சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் மீது மிளகாய்த்தூள் கலந்த கூழ் மூட்டையை வீசிய பெண் உறுப்பினர்!
கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்ற குழுக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் பிரதீப் ஜயவர்தன மீது மிளகாய்த்தூள் கலந்த கூழ் முட்டைகளால் வீசித் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இன்று (31-01-2022) கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் சபையின் சுற்றாடல் குழுவின் தலைவரைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது.
இந்நிலையில், சுதந்திரக் கட்சி உறுப்பினர் மிளகாய்த்தூள் கலந்த கூல் முட்டைகளால் தாக்கப்பட்டுள்ளார். சுற்றாடல் மற்றும் காணி நிலைக்குழுவின் தலைவர் பதவிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதீப் ஜயவர்தனவும், அதே கட்சியின் சமன் அபேகுணவர்தனவும் போட்டியிட்டனர்.
குறித்த வாக்கெடுப்பில் 4 வாக்குகளை பிரதீப் ஜயவர்தனவும், 2 வாக்குகளை சமன் அபேகுணவர்தனவும் பெற்றனர். இந்த நிலையில் தோல்வியை தாங்க முடியாத சமன் அபேகுணவர்தனவுக்கு நெருக்கமான பெண் உறுப்பினர் ஒருவர் பிரதீப் ஜயவர்தன மீது மிளகாய்த்தூள் கலந்த கூழ் மூட்டைக் கலவையால் தாக்கினார்.
சம்பவம் தொடர்பாக அங்கிருந்த மாநகர சபை உறுப்பினர் ஒருவர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்ததாவது,
சபையில் நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், சபையின் பெண் உறுப்பினர் ஒருவர் தனது கைப்பையில் மறைத்து வைத்திருந்த பொதி ஒன்றை எடுத்து பிரதீப் ஜயவர்தன மீது வீசினார் எனத் தெரிவித்துள்ளார்.
குறித்த பொதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் பிரதீப் ஜயவர்தனவின் தலையில் மோதி வெடித்துச் சிதறியது எனவும், அவரது உடல் முழுவதும் துர்நாற்றம் வீசும் கூழ் முட்டைகளால் நனைந்தது எனவும் அவர் மேலும் கூறினார்.
கூல்முட்டைத் தாக்குதலுக்குப் பின்னர், மாநகர சபை உறுப்பினர்கள் இரு குழுக்களாகப் பிரிந்து ஒருவரையொருவர் பார்த்து கூச்சலிடத் தொடங்கினர். இதனால் கொழும்பு மாநகர சபையின் குழு மண்டபம் ஒரே குழப்பமாக மாறியது.
பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் தலையிட்டு சமரசம் செய்தனர். பிரதீப் ஜயவர்தன வேறு ஆடை அணிந்து அங்கிருந்து சென்றார் என்று குறித்த மாநகர சபை உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பிரதீப் ஜயவர்தன, கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனாநாயக்கவிடமும், கறுவாத்தோட்டை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளார்.