நீதிமன்றத்தில் துடிதுடித்து உயிரிழந்த குற்றவாளி ; துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அடையாளம்
கொழும்பு - புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்திற்குள் இன்று (19) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல் கும்பலைச் சேர்ந்த சஞ்சீவ குமார சமரரத்ன என்ற கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்டார்.
19 கொலைக் குற்றச்சாட்டுகள்
போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி நேபாளத்தின் காத்மாண்டுவிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தபோது, செப்டம்பர் 13, 2023 அன்று, கணேமுல்ல சஞ்சீவ குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
அதன்படி, சந்தேக நபர் இன்று (19) காலை பூஸ்ஸ சிறைச்சாலையிலிருந்து அளுத்கடே நீதிமன்ற வளாகத்திற்கு நீதிமன்ற வழக்கு ஒன்றிற்காக அழைத்து வரப்பட்டபோது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
நிலுவையில் உள்ள வழக்கில் ஆஜர்படுத்துவதற்காக இன்று சிறைச்சாலை அதிகாரிகளால் புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார். பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸாரின் பாதுகாப்பில் அவர் அழைத்துவரப்பட்டிருந்தார்.
பின்னர் அவர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5ஆம் இலக்க நீதவான் நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சட்டத்தரணி போல் வேடமணிந்த நபர்
அங்குள்ள நீதிமன்ற பிரதிவாதி கூண்டில் வைத்து அவர் சுடப்பட்டதுடன், சட்டத்தரணி போல் வேடமணிந்த ஒருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட கைத்துப்பாக்கியும் பிரதிவாதி கூண்டுக்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டிருந்தது.
துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த கனேமுல்ல சஞ்சீவ கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
கனேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் நபர், துப்பாக்கியை ஒரு புத்தகத்தில் சூட்சுமமாக மறைத்து வைத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேவேளை உயிரிழந்த கணேமுல்ல சஞ்சீவ மீது 19 கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.