அதிகாலையில் பரபரப்பான கொழும்பு ; கட்டிடமொன்றில் பாரிய வெடிப்புச் சம்பவம்!
கொழும்பு 07 − ரீட் மாவத்தையிலுள்ள கட்டிடமொன்றில் பாரிய வெடிப்புச் சம்பவமொன்று ஏற்பட்டுள்ள நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த வெடிப்புச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து அங்குள்ள விருந்தகம் தீப்பற்றிக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் எரிவாயு கசிவினால் இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளதுடன் தீயை அணைக்கும் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு 07 பழைய ரேஸ்கோர்ஸ் கட்டிடத்தில் அமைந்துள்ள உணவகத்தில் குறித்த வெடிப்புச் சம்பவமானது உணவகத்தின் சர்வதேச துரித உணவு சங்கிலிப் பிரிவில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான எஸ்.எஸ்.பி. நிஹால் தல்துவ தெரிவித்தார்.
கொழும்பு மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினரும் பொலிஸாரும் இணைந்து தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். உயிர்ச் சேதமோ காயமோ ஏற்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
வெடி விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிய அரசாங்கப் பகுப்பாய்வாளர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளதுடன் கொழும்பு தெற்கு பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் கறுவாத்தோட்ட பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



