சட்டவிரோத கட்டுமானங்களுக்கு கொழும்பில் இனி அனுமதியில்லை ; ஹரிணி அமரசூரிய
கொழும்பு மாவட்டத்தினுள் சட்டவிரோத கட்டுமானங்களுக்கு அனுமதியளிப்பதற்கோ அல்லது அபிவிருத்தியின் பெயரால் மக்களை ஆபத்தில் தள்ளும் குடியேற்றங்களை நிர்மாணிப்பதற்கோ ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
கொழும்பு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற, கொழும்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வெள்ள நிலைமை
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, கொழும்பு மாவட்டம் வெள்ள நிலைமையால் இவ்வளவு தூரம் ஆபத்துக்குள்ளாகியிருப்பதற்கு, எந்தவொரு திட்டமிடலோ அல்லது சட்டதிட்டங்கள் குறித்த தெளிவோ இன்றி மேற்கொள்ளப்பட்ட கட்டுமானங்களே காரணமாகும்.
மிகவும் தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் காரணமாகவே மாவட்டமும் மக்களும் இந்த ஆபத்துக்குள்ளாகியுள்ளனர்.
அண்மையில் ஏற்பட்ட சூறாவளி நிலைமையால் அதிகளவான உயிர் மற்றும் சொத்துச் சேதங்கள் ஏற்பட்ட மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் கொழும்பு மாவட்டத்திற்கு ஏற்பட்ட சேதம் குறைவாக இருந்த போதிலும், எதிர்காலத்தில் மாவட்டத்தில் ஏற்படக்கூடிய வெள்ள நிலைமையைக் கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இணைந்து விசேட தலையீடு ஒன்றை மேற்கொள்ளவுள்ளோம்.
இன்றைய தினம் நடைபெற்ற மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழு கூட்டத்திலும் இந்த விடயம் தொடர்பில் விசேடமாக விவாதிக்கப்பட்டது. வருடாந்தம் ஏற்படும் வெள்ளம் கொழும்பு மக்களின் இயல்பு வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறுவதற்கு ஒருபோதும் இடமளிக்க இயலாது.
அனைத்து நிறுவனங்களுடனும் இணைந்து மாவட்டத்தில் வெள்ளக் கட்டுப்பாட்டிற்கான பொதுத் திட்டமொன்றை முன்வைத்துஇ அதற்கேற்பச் செயற்படத் தேவையான நடவடிக்கைகளைத் தயார் படுத்த வேண்டும்.
கொழும்பு மாவட்டத்தினுள் ஆபத்து நிறைந்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு ஏதேனும் தீர்வை வழங்குவது தொடர்பில் நாம் இப்போதே கலந்துரையாடி வருகிறோம் என்றார்.