அமோக விற்பனையில் தங்கத்தால் செய்யப்பட்ட மோதகம்; விலை எவ்வளவு தெரியுமா!
இந்தியாவின் நாசிக் நகரில் உள்ள 'சாகர் ஸ்வீட்ஸ்' என்ற இனிப்பு கடையில் விநாயகப் பெருமானின் விருப்பமான ஸ்வீட் வகையான மோதகத்தை ஒரு கிலோவுக்கு 12,000 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர்.
அதாவது இந்த மோதகத்தில் சாப்பிடக்கூடிய தங்கம் சேர்க்கப்படுகிறது. சமீபத்தில் கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தியின் போது இந்த ஸ்வீட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாக கடை உரிமையாளர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய சாகர் ஸ்வீட்ஸ் உரிமையாளர் தீபக் சவுத்ரி, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுமார் 25 வகையான ஸ்வீட்ஸ்களை தங்கள் கடையில் தயார் செய்து விற்பனை செய்தததாகவும், அதில் இந்த தங்க மோதகம் மட்டுமின்றி, வெள்ளியால் செய்யப்பட்ட மோதகமும் தயாரிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். அத்துடன் தங்க மோதகம் ஒரு கிலோ ரூ.12,000க்கு விற்பனை செய்யப்பட்டபோதிலும் ஏராளமானோர் அதனை வாங்க ஆர்வம் காட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.
தங்க ஆபரணங்களில் பயன்படுத்தப்படும் தங்கத்தை விட இந்த ஸ்வீட்டுகளில் பயன்படுத்தப்படும் தங்கத்தின் விலை அதிகம் என்றும் அவர் கூறுகிறார். இதேவேளை முன்னதாக சூரத்தில் விலை உயர்ந்த ஸ்வீட் தங்கத்தை மெல்லிய இழைகளாக மாற்றி தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்த தங்கத்தால் செய்யப்பட்ட ஸ்வீட் ரூ.9,000 என்று சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உலகத்தில் முதன் முறையாக 22 கேரட் தங்க முலாம் மூசப்பட்ட வட பாவ் துபாயில் உருவாக்கப்பட்டுள்ளதாக காணொளி வெளியானது. வெண்ணெய் மற்றும் பாலாடைக்கட்டி சேர்க்கப்பட்ட அந்த வடா 22 கேரட் தங்கத்தால் செய்யப்பட்ட காகிதத்தால் மூடப்பட்டுள்ளது.
22 கேரட் தங்க காகிதம் பிரான்சில் இருந்து வரவழைக்கப்பட்டதாகவும், இந்த வடா பாவ் விலை ரூ. 2,000 என்றும் சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல் வைரலானது. இதனிடையே , ஹைதராபாத்தில் விநாயகர் சதுர்த்தி அன்று விநாயருக்கு படைக்கப்பட்ட 21 கிலோ லட்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை ரூ .18.90 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டதாக கூறப்படுகின்றது.
ஆந்திர சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் யாதவ், தெலுங்கானா தொழிலதிபர் மர்ரி ஷஷன் ரெட்டி இணைந்து இந்த பிரபலமான லட்டை வாங்கியுள்ளனர். இந்த ஏலத்தில் லட்டின் ஆரம்ப விலையானது ரூ.1,116க்கு தொடங்கிய நிலையில் சில நிமிடங்களில் நூற்றுக்கணக்கான பக்தர்களின் பலத்த ஆரவாரங்களுக்கிடையில் அதிக விலைக்கு ஏலம் விடப்பட்டது.


