இலங்கையில் எழுச்சி பெற்றுள்ள தேங்காய் சார் உற்பத்தி ; அதிகரித்த வருமானம்
இலங்கையின் தேங்காய் உற்பத்தி தொழிற்துறையானது தற்போது 2.5 பில்லியன் அமெரிக்க டொலரை பெறக்கூடிய ஆற்றலை கொண்டுள்ளதாகவும் அதன் தற்போதைய மதிப்பு தோராயமாக 850 மில்லியன் அமெரிக்க டொலர்களிலிருந்து அதிகரித்துள்ளதாகவும் தேங்காய் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ரந்தீவ மலாலசூரிய தெரிவித்துள்ளார்.
இவ்வருடத்திற்கான தேங்காய் உற்பத்தியை 4.5 பில்லியனாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் இலங்கை தேங்காய்களின் மதிப்பு கூட்டப்பட்ட பிறகு மறு ஏற்றுமதிக்காக குறைந்த மதிப்புள்ள தேங்காய் உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையின் தேங்காய் உற்பத்தி
தேங்காய்கள் வீணாவதைக் குறைக்க, பதப்படுத்தப்பட்ட தேங்காய் உற்பத்தி பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மலாலசூரிய எடுத்துரைத்தார். உலகலாவிய ரீதியில் இலங்கை நான்காவது பெரிய தேங்காய் உற்பத்தியாளராக காணப்படுகின்றது.
உலகளாவிய சந்தையைக் கருத்தில் கொண்டு, இலங்கை தனது தேங்காய் உற்பத்தி பொருட்களை சர்வதேச அளவில் கொண்டு செல்ல அதிக வாய்ப்பு உள்ளது என்று அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேங்காய் உற்பத்தியில் 2.5 பில்லியன் அமெரிக்க டொலரை பெற்றுக்கொள்ள குறைந்த பட்சம் 4.5 பில்லியன் தேங்காய்களை உற்பத்தி செய்யக்கூடிய தேவை காணப்படுவதாகவும், இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலிருந்து குறைந்த மதிப்புள்ள புதிய தேங்காய்களை இறக்குமதி செய்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி மறு ஏற்றுமதி செய்ய முடியும் எனவும் அவர் இதன் போது தெரிவித்துள்ளார்.