மதகுருமார்களின் ஆடை விவகாரம்; எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்துள்ள கோரிக்கை
தண்டனை அனுபவிக்கும் மகா சங்கத்தினர் மற்றும் ஏனைய மதகுருமார்கள் சிறைச்சாலையினுள்ளும் வெளியிலும் அணிய வேண்டிய ஆடைகள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை குறித்து ஆராய்வதற்காக, அது தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவை உடனடியாகக் கூட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
பொது நிர்வாகம், நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவை உடனடியாகக் கூட்டுமாறு சபாநாயகர் ஊடாக அந்தக் குழுவின் தலைவரிடம் எதிர்க்கட்சித் தலைவர் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

சர்ச்சைக்குத் தீர்வு
தண்டனை அனுபவிக்கும் மதகுருமார்களின் ஆடை தொடர்பான சர்ச்சைக்குத் தீர்வு காணும் வகையில், இது குறித்த தற்போதைய நிலையியல் கட்டளைகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான பரிந்துரைகளை முன்வைக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இந்த விதியை நடைமுறைப்படுத்துவதுடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரையும் துறைசார் மேற்பார்வைக் குழுவின் முன்னிலையில் முன்னிலையாகுமாறும், அழைப்பு விடுக்குமாறும் அவர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இத்தகைய சந்தர்ப்பங்களில், சட்டவாக்க சபையின் (நாடாளுமன்றத்தின்) செயற்திறன்மிக்க பங்களிப்பும் தலையீடும் அவசியமானது என எதிர்க்கட்சித் தலைவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.